Saturday, September 8, 2012

3 மாகாண சபைகளுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது

மூன்று மாகாண சபைகளுக்கு இன்று 8ஆம் திகதி இடம்பெறுகின்ற தேர்தலில் 108 பேரை தெரிவு செய்யவென 3073 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில்,

 

வாக்களிக்க தகுதி – 33,36,417
வாக்குச்சாவடிகள் – 3247
வாக்கு எண்ணும் நிலையம் – 236

* தொகுதி வாரியாகத் தேர்தல் முடிவு
* 3 மாகாணங்களில் 37 தொகுதிகள்
* 21,000 பொலிஸ் கடமையில்
* 4,000 கண்காணிப்பாளர்கள் களத்தில்

 

கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்தி ஆகிய மூன்று மாகாண சபைகளிலிருந்து 108 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று சனிக்கிழமை நடைபெறுகிறது. மேற்படி மூன்று மாகாண சபைகளிலிருந்தும் 108 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கென இம்முறை 3073 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர். 2011ஆம் ஆண்டின் தேர்தல் இடாப்பின் பிரகாரம் இன்று இடம்பெறும் தேர்தலில் 33 இலட்சத்து 36 ஆயிரத்து 417 பேர் (33,36,417) வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர். வாக்கெடுப்புக்கென தேர்தல்கள் திணைக்களத்தினால் மூன்று மாகாண சபைகளுக்குமுரிய 37 தேர்தல் தொகுதிகளில் மூவாயிரத்து 247 (3,247) வாக்குச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன.

 

இன்று காலை 7 மணிக்கு அனுராதபுரம், பொலன்னறுவை, திருகோணமலை, மட்டக்களப்பு, திகாமடுல்ல, இரத்தினபுரி, கேகாலை ஆகிய ஏழு மாவட்டங்களிலுமுள்ள 37 தேர்தல் தொகுதிகளிலும் வாக்கெடுப்பு ஆரம்பமாகியது. தேர்தல் நடைபெறும் மாவட்டங்களின் தேர்தல் அலுவலகங்களிலிருந்து வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பெட்டிகள் பூரண பாதுகாப்பிற்கு மத்தியில் எடுத்துவரப்பட்டுள்ளன.

 

தேர்தல் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கென தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவினால் 175 மேலதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்திற்கு 25 அதிகாரிகள் வீதம் இவர்கள் மேற்பார்வை நடவடிக்கைகளில் ஈடுபடுவர். தேர்தல் கடமைகளுக்கென நியமிக்கப்பட்ட மேலதிகாரிகளும் அரசாங்க ஊழியர்களும் தமக்கு வழங்கப்பட்டிருக்கும் வாக்குச் சாவடிகளில் அறிக்கையிடலை ஆரம்பிப்பர்.

 

மூன்று மாகாண சபைக்குமுரிய தேர்தலை கண்காணிப்பதற்கென இம்முறை சுமார் 4 ஆயிரத்துக்கும் அதிகமான உள்நாட்டு கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவர். இவர்களுக்கு மேலதிகமாக கண்காணிப்பு வாகனங்களும் சேவையில் ஈடுபடுத்தப்படும். தேர்தல்கள் திணைக்களத்தினால் 400 கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பஃவ்ரல், கஃபே ஆகிய கண்காணிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட பல தனியார் கண்காணிப்பு நிறுவனங்கள் நீதியானதும் அமைதியானதுமான முறையில் தேர்தலை நடத்தும் பொருட்டு மிகுந்த ஆர்வத்துடன் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

 

இதேவேளை 06 ஆம் திகதி முதல் 21 ஆயிரம் பொலிஸார் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் காமினி நவரட்ண குறிப்பிட்டுள்ளார்.வாக்குச் சாவடியொன்றுக்கு ஆயுதம் தாங்கிய பொலிஸார் மூவர் வீதம் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படுவரெனவும், மூன்று மாகாண சபைகளுக்குமுரிய தேர்தலுக்குமென 108 பொலிஸ் நிலையங்கள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கடமையிலீடுபடுத்தப்படும் 21 ஆயிரம் பொலிஸாருள் 123 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் 1400 பொலிஸ் இன்ஸ்பெக்டர்களும் அடங்குவர்.

 

மேலும் 70 பெண் பொலிஸ் இன்ஸ்பெக்டர்களும் இவர்களில் உள்ளடக்கப்படுவரெனவும், பொலிஸார் வாக்குச் சாவடிகளில் மாத்திரமன்றி அதற்கு வெளியிலும் விசேட பாதுகாப்பு சேவைகளை முன்னெடுப்பர். நான்கு வாக்குச் வாடிகளுக்கு ஒரு பொலிஸ் நடமாடும் சேவையும் நடாத்துவதற்கு ஏற்பாடாகியுள்ளது. இவ்விசேட பொலிஸ் பாதுகாப்பு சேவை எதிர்வரும் 09ஆம் திகதி வரை தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் அமுலில் இருக்குமெனவும் அவர் சுட்டிக்காடடி உள்ளார்.

 

இதுவரை அமைதியான சூழலே காணப்படுவதாக கூறிய பிரதி பொலிஸ் மா அதிபர், கிழக்கு மாகாணத்தில் ஓரளவு பதற்றம் காணப்பட்ட போதிலும் பொலிஸாரின் ஒத்துழைப்புடன் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார். பொலிஸ் மா அதிபரின் பணிப்புரையின் பேரில் கிழக்கு மாகாணத்திற்கென விசேட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டிருப்பதாகவும், தேர்தல் நடைபெறும் இடங்களில் அமைதியினை குழப்ப முயற்சித்தால் நடத்தப்படவிருக்கும் தேர்தலில் அநீதி ஏற்படாமையை உறுதிப்படுத்தும் முகமாக கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுக்கென தேர்தல்கள் திணைக்களத்திலிருந்து விசேட அதிகாரிகளடங்கிய குழுவொன்றும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

நீதியானதும் அமைதியானதுமான முறையில் தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற வகையிலான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல்கள் திணைக்களம் முன்னெடுத்து வந்துள்ளது. தேர்தல் முடிவடைந்ததும் தபால் மூல வாக்களிப்பின் முதலாவது பெறுபேற்றினை இன்று நள்ளிரவு 12 மணியளவிலும் முழுமையான வாக்களிப்பினது முதலாவது பெறுபேற்றினை மறுநாள் நாளை காலை 2 மணியளவிலும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் பிரதி ஆணையாளர் மொஹமட் தெரிவித்துள்ளார்.

 

வாக்குகள் 236 நிலையங்களில் எண்ணப்படும். வாக்கு எண்ணும் நிலையங்களுககு பஃவ்ரல், கஃபே ஆகிய கண்காணிப்பாளர்களுக்கு பார்வையிடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் 26 நிலையங்களிலும் திகாமடுல்லையில் 29 நிலையங்களிலும் திருகோணமலையில் 19 நிலையங்களுமாக கிழக்கு மாகாணத்தில் 74 வாக்கு எண்ணும் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. அநுராதபுரம் மாவட்டத்தில் 42 நிலையங்களிலும் பொலன்னறுவையில் 23 நிலையங்களிலுமாக வடமத்திய மாகாணத்தில் 65 நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படும். கேகாலையில் 47 நிலையங்களிலும் இரத்தினபுரியில் 50 நிலையங்களிலுமாக சப்ரகமுவ மாகாணத்தில் 97 நிலையங்களில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.

 

கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, திகாமடுல்ல, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் 1162 வாக்குச்சாவடிகளில் நாளை தேர்தல் நடத்தப்படுகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளிலும் 414 வாக்குச் சாவடிகளில் வாக்கெடுப்பு நடத்தப்படும். இம் மாவட்டத்தில் 11 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கென 14 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு 3 இலட்சத்து 47 ஆயிரத்து 99 பேர் (3,47,099) வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

 

திகாமடுல்ல மாவட்டத்தில் அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை, பொத்துவில் ஆகிய நான்கு தேர்தல் தொகுதிகளிலுமிருந்து 14 பேரை தெரிவு செய்வதற்காக 17 பேர் போட்டியிடுகின்றனர். இம்மாவட்டத்தில் 4 இலட்சத்து 41 ஆயிரத்து 287 (4,41,287) பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இங்கு 463 வாக்குச் சாவடிகள் நிறுவப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் சேருவில, திருகோணமலை, மூதூர் ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளில் நாளை வாக்கெடுப்பு நடத்தப்படும். இங்கு 285 வாக்களிக்கும் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இம் மாவட்டத்தில் 10 பேரை தெரிவு செய்வதற்காக 13 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு 2 இலட்சத்து 45 ஆயிரத்து 363 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

 

சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை ஆகிய இரண்டு மாவட்டங்க ளிலும் 1189 வாக்குச் சாவடிகளில் நாளை தேர்தல் நடத்தப்படும். இரத்தினபுரி மாவட்டத்தில் எஹலிய கொட, இரத்தினபுரி, பெல்மதுள்ள, பலாங்கொடை, இறக்குவானை, நிவித்தி கலை, கலவானை, கொலன்ன ஆகிய எட்டு தேர்தல் தொகுதிகளிலுமுள்ள 623 வாக்குச் சாவடிகளில் தேர்தல் நடத்தப்படும். இம் மாவட்டத்தில் 24 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கென 27 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இம் மாவட்டத்தில் 7 இலட்சத்து 69 ஆயிரத்து 814 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

 

கேகாலை மாவட்டத்தில் தெதிகம, கலிகமுவ, கேகாலை, இறம்புக்கனை, மாவனல்லை, அரநாயக்க, எட்டியாந் தோட்டை, ருவன்வெல்ல, தெரணியகலை ஆகிய ஒன்பது தேர்தல் தொகுதிகளிலும் 566 வாக்களிப்பு நிலையங்களில் நாளை தேர்தல் நடத்தப்படும். இங்கு 18 பேரை தெரிவு செய்வதற்கென 21 பேர் போட்டியிடுகின்றனர். 6 இலட்சத்து 31 ஆயிரத்து 981 பேர் இம்மாவட்டத்தில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

 

வடமத்திய மாகாணத்தில் அநுராதபுரம், பொலன்னறுவை ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் 895 வாக்குச் வாவடிகளில் நாளை தேர்தல் நடத்தப்படும். அநுராதபுரம் மாவட்டத்தில் மதவாச்சி, ஹொரவப்பொத்தானை, அனுராதபுரம் கிழக்கு, அநுராதபுரம் மேற்கு, கலாவெவ, மிஹிந்தலை ஆகிய ஆறு தேர்தல் தொகுதிகளிலும் 608 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கெடுப்பு நடத்தப்படும். இம் மாவட்டத்தில் 21 பேரை தெரிவு செய்வதற்கென 24 பேர் போட்டியிடுகின்றனர். இங்கு 6 இலட்சத்து 6 ஆயிரத்து 508 பேர்வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

 

பொலன்னறுவை மாவட்டத்தில் மின்னேரியா, மெதிரிகிரிய, பொலன்னறுவை ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளிலும் 287 வாக்களிப்பு நிலையங்களில் நாளை வாக்கெடுப்பு நடத்தப்படும். இங்கு 10 பேரை தெரிவு செய்வதற்கென 13 பேர் போட்டியிடுகின்றனர். இம் மாவட்டத்தில் 2 இலட்சத்து 94 ஆயிரத்து 365 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். உத்தியோகப்பூர்வ தபால் மூல வாக்களிப்பு கடந்த மாதம் 27, 28 ஆகிய திகதிகளில் நடத்தப்பட்டதுடன் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் யாவும் 05 ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 

மூன்று மாகாண சபைகளும் ஜூன் 27 ஆம் திகதி கலைக்கப்பட்டன. ஜுலை 12 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதிவரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஜுலை 12 முதல் 18 வரையான காலப் பகுதிக்குள் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. ஏழு மாவட்டத்திலுமிருந்து 91 கட்சிகள் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தன. இதில் இரண்டு கட்சிகள் நிராகரிக்கப்பட்டன. வேட்பு மனுக்களை தாக்கல் செய்த 88 சுயேட்சைகளிலும் இரண்டு சுயேட்சைகள் நிராகரிக்கப்பட்டன. வாக்காளர் அட்டைகள் ஒகஸ்ட் 17 ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை விநியோகிக்கப்பட்டன. வாக்காளர் அட்டைகள் கிடைக்காதவர்கள் தமது மாவட்ட தேர்தல் அலுவலகத்துடன் தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.