
234 உள்ளூராட்சி சபைகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 205 சபைகளை கைப்பற்றி ஐ.ம.சு.முன்னணி அமோக வெற்றியீட்டியுள்ளது.
ஐ.தே.க. தனது பல கோட்டைகளை இழந்து படுதோல்வியடைந்ததோடு அதனால் 9 சபைகளை மட்டுமே வெல்ல முடிந்தது. ஜே.வி.பி. தனக்கிருந்த ஒரேயொரு உள்ளூராட்சி சபையையும் இழந்து அரசியலிலிருந்தே தூக்கிவீசப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நேற்று முன்தினம் வடக்கு கிழக்கு உட்பட நாடு முழுவதும் அமைதியாக நடைபெற்றது. நேற்றுக்காலை 10 மணியாகும்போது சகல தேர்தல் முடிவுகளும் வெளியிடப்பட்டன.
இத்தேர்தலில் ஐ.தே.க. தனது கட்டுப்பாட்டிலிருந்த 18 உள்ளூராட்சி சபைகளையும் கோட்டைவிட நேரிட்டதோடு முஸ்லிம் காங்கிரசும் ஓரளவு பின்னடைவையே எதிர்கொண்டது. வடக்குஇ கிழக்கு தமிழ் பிரதேசங்களை மையமாகவைத்து தேர்தலில் குதித்த தமிழரசுக் கட்சி 12 உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றி தேசிய அரசியலில் தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது.
முஸ்லிம் காங்கிரஸினால் நான்கு சபைகளை மட்டுமே வெல்லமுடிந்தபோதும் வடக்கு கிழக்குக்கு வெளியில் முதற்தடவையாக போட்டியிட்ட பல சபைகளில் உறுப்பினர்களை வென்றது.
தேசிய காங்கிரஸ் தனது கட்டுப்பாட்டிலிருந்த இரு சபைகளையும் தக்கவைத்துக் கொண்டதோடு மலையக மக்கள் முன்னணி நுவரெலியா பிரதேச சபையையும் சுயேட்சைக் குழு-1 பல்லேபொல பிரதேச சபையையும் கைப்பற்றியது விசேட அம்சங்களாகும்.
ஆட்சி மாற்றத்திற்கு முதற்படியாக இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவதாக வீரவசனம் பேசிய ஐ.தே.க.வினால் பண்டாரவளை மாநகரசபை குளியாப்பிட்டிய நகரசபை கம்பொள நகரசபை கடுகண்ணாவ நகரசபை களுத்துறை நகரசபை அடங்கலான ஒன்பது உள்ளூராட்சி சபைகளை மட்டுமே தக்கவைக்க முடிந்தது.
ஐ.ம.சு.மு.ஐ விட 725 வாக்கு வித்தியாசத்தில் ஐ. தே. க. கம்பொளை நகர சபையைக் கைநழுவியது. பண்டாரவளை மாநகரசபையும் 154 வாக்குகளினாலே ஐ.ம.சு.மு.க்கு கைமாறியது. 20 வருடங்களின் பின்னர் கதிர்காமம் பிரதேச சபையை ஐ.ம.சு.மு.யிடம் ஐ.தே.க. பறிகொடுத்தது முக்கிய விடயமாகும்.
வத்தளை மாபோல நகரசபை வத்தளை பிரதேச சபை பேலியாகொட நகர சபை பாணந்துரை நகரசபை ஹொரண பிரதேசசபை அடங்கலான 18 உள்ளூராட்சி சபைகளை ஐ.தே.க. பரிதாபமாக இழந்தது.
முஸ்லிம் காங்கிரசின் கட்டுப்பாட்டிலிருந்த காத்தான்குடி நகரசபையும்இ ஏறாவூர் நகரசபையும் இம்முறை ஐ.ம.சு.மு. வின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. கோரளைப்பற்று மேற்கு பிரதேசசபையையும் ஐ.ம.சு.மு.யே வென்றது. இதன்மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் நடந்த 3 உள்ளூராட்சி சபைகளையும் ஐ.ம.சு.மு. கைப்பற்றியது. 7 ஆயிரம் மேலதிக வாக்குகளால் கோரளைப்பற்று மேற்கு பிரதேச சபையை ஐ.ம.சு.மு. வென்றது.(vk;.up.977)