Saturday, August 20, 2011

கிழக்கில் மர்ம மனிதன் விவகாரத்தால் கூலித் தொழிலாளர் பெரிதும் பாதிப்பு

கிழக்கு மாகாணத்தில் மர்ம மனிதன் விவகாரம் காரணமாக சிவில் நிர்வாகம் முற்றாக முடங்கும் நிலைமையேற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக இந்தச் சம்பவங்கள் காரணமாக மிகவும் பின்தங்கிய பிரதேச மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலகங்களுக்குச் செல்லும் பெண் ஊழியர்களின் வருகை மிகவும் குறைவடைந்த நிலையிலுள்ளதாகவும் இதன் காரணமாக தமது அன்றாட நடவடிக்கைகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அத்துடன் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்குமிடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் காரணமாக கிராமங்களில் சிறுசிறு கொள்ளைச் சம்பவங்களும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மர்ம மனிதனைப் பயன்படுத்தும் சிலர் வீடுகளில் பாய்ந்து திருட்டுகளில் ஈடுபட்டு வருவதுடன், இது தொடர்பில் பொதுமக்கள் பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று முறையிடுவதற்கும் பயப்படும் நிலையிலும் உள்ளனர்.
யுத்த காலத்தை விட மிக மோசமான நிலையே இன்று ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தில் மக்கள் மாலை 5 மணிக்குப் பின்னர் வீதிகளிலிறங்க பயப்படும் நிலையே காணப்படுகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தின் போது மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட படுவான்கரை பிரதேச மக்கள் தமது அன்றாட பணிகளை செய்ய முடியாத நிலைமையை மர்ம மனிதன் விவகாரம் ஏற்படுத்தியுள்ளது.
தினமும் மக்கள் பயத்தில் உறைந்து நாட்களை கடத்தி வருகையில், கூலித் தொழிலுக்குச் சென்று தமது குடும்பங்களை வழிநடத்தியவர்கள் கடந்த ஒருவாரமாக எதுவிதத் தொழிலுக்கும் செல்ல முடியாத நிலையில் மிகவும் கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
மர்ம மனிதன் விவகாரம் காரணமாக மட்டக்களப்பு தொடக்கம் பொத்துவில் வரையிலான அதிவேக நெடுஞ்சாலைகளில் விபத்துகள் அதிகரிக்கும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
தற்போதைய நிலைமை காரணமாக பொலிஸாரின் மோட்டார் வாகனப் போக்குவரத்துப் பிரிவு முற்றாக செயலிழந்துள்ளது. பொலிஸார் மீது மக்கள் தாக்குதல்கள் நடத்துவதன் காரணமாக வீதி பாதுகாப்புக் கடமைகளில் பொலிஸார் ஈடுபடுவது நிறுத்தப்பட்டுள்ளது.
பயணங்களை மேற்கொள்ளும் பொதுமக்கள் வாகனங்களின் அதிக வேகம் காரணமாக பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.