Thursday, March 24, 2011

நமது ஊர் கலைஞர்களை ஊக்குவிக்கும் மற்றுமொரு களம் எமது பிரபல கவிஞர் மன்சூர் ஏ.காதர் அவர்களின் கவிதை

கந்தூரிக்கு நேர்ச்சிக்கப்பட்ட......


நிராகரிக்கப்பட்ட நியாயங்களுக்கான நமது ஜிஹாத்
கபனிடப்பட்ட ஜனாஸாக்களாய்
தல்கீன் பாராயணத்தை எதிர்பார்த்தபடிக்கு...

விருட்சங்களால் விழுங்கப்பட்டிருந்த
குறுநில மன்னர்தம் ராஜதானிகளில்
மறுபடியும் செவ்வனே எல்லைப்படுத்தப்பட்டு,
நிர்ச்சலனமான
ஜனநாயகத்தின் மரகத தலைப்பாகைகளுடன்
முடிசூட்டு விழாக்கள்...

நாம் கபுரிஸ்தானங்களுள்ளே..  ஜனாஸாக்களாய்...
தல்கீன் பாராயணத்தை எதிர்பார்த்தபடிக்கு...

ராஜ கிரீடம் சுமந்த சிரசுகளை இலக்குப்படுத்த
பொறுக்கப்பட்ட நமது கவண் கற்கள்
நவீன இரட்சகர்களின்
சிம்மாசன அங்கலாய்ப்புக்கான சதுரங்கக் காய்களாய்
மொழிபெயர்க்கப்பட்டன.
தாவீதின் கவண் தொடர்ந்தும் கோலியாத் கரங்களில்
அதனால்,
நமது ஸியாரங்களை
நாம் கட்டிக் கொண்டேயிருப்போம்

நம்மை விற்றுப் பிழைக்கும் தாதாக்கள்
ஒழித்து வைக்கப்பட்ட கசிப்புக் கொள்கலங்களோடு
நமது கழிவிரக்கங்களை மூலதனமாக்கி
மேலும்
புதிய வியூகங்கள் எனும் பெயரில்
தம் நாற்காலி நப்பாசையின் எதிரியை
தோற்கடிக்கும் முனாபிக் தனங்களோடு
நன்றி எனும் சௌந்தர்ய மலர்களால்
இறைவன் சமைத்த
நமது மெத்தனமான இரண்டாம் கிரீடத்தை
ஆழ்மூச்சு முட்ட அழுத்தம் கொடுக்கும்.

மறுபடியும்... மறுபடியும்...
கந்தூரிக்கு நேர்ச்சிக்கப்பட்ட மாடுகளாய்
நமது உடன் பிறப்புக்கள்
மடுவங்களை நோக்கி சாய்க்கப்பட்டபடியே....

கங்கத்தியப்பா
21.03.2011

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.