Friday, December 30, 2011

பரீட்சை பெறுபேறுகளும் உளவியல் தாக்கங்களும்

எஸ்.எல்.மன்சூர் (கல்விமானி) 

அறிஞர் ஜான் புக்கர் 'இன்றைய உலகத்தில் பல வியாதிகளைக் குணப்படுத்துவதற்கு கல்வி ஒன்றே சிறந்தது' என்று கூறுகின்றார். ஆனால் அந்தக் கல்வியினால் பலர் நோயாளியாக மாறுகின்றார்கள்  என்றால் அந்தக்கல்வியால் என்ன பிரயோசனம். அதனைத்தான் இன்றைய புலமைப்பரிசில் பரீட்சையின் முடிவுகள் தெளிவு படுத்துகின்றனவா?   

இவ்வாண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் அனைத்தும் வெளியாகியதைத் தொடர்ந்து கூடிய புள்ளிகள் பெற்றவர்கள் பற்றிய விபரங்கள் பத்திரிகைகளில் வெளியாவதும், வெற்றியடைந்த மாணவர்களுக்கு பாராட்டுக்கள் குவிவதும், பாடசாலைக்குப் பாடசாலை போட்டியிட்டு விழாக்கோலம் நடாத்துவதும் கற்பித்த ஆசிரியர்கள், உதவிநின்ற அதிபர்கள் போன்றோருக்கு பரிசுகள் வழங்குவதும் தற்போது வாடிக்கையாகிவிட்ட இன்றைய சூழலில் குறித்த புள்ளிகளை அடைய முடியாத மாணவர்களிளனதும், அவர்களுக்காக இரவு பகலாக கஷ்டப்பட்ட பெற்றோர்களினதும் நிலையையும் சற்று யோசித்துப் பார்த்தோமா? அவர்களது மனசஞ்சலத்தில் பங்குபற்றி ஆறுதல் கூறினோமா? பலர் அவர்களை நினைத்துக்கூட பார்க்கவே இல்லை.

தரம் ஒன்றில் பிள்ளையை பாடசாலைக்குள் விட்ட கையோடு 'என்பிள்ளை தரம் 5 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்து பாராட்டப்படவேண்டும்' என்கிற மனகோட்டை கட்டிய பெற்றோர்களும், அவர்களை நம்பி ஐந்து வருடங்களாக ஏற்றிய மனச்சுமையை கோட்டை விட்ட மாணவர்களினதும் நிலையைப் பற்றி பாடசாலைகளின் அதிபர்களோ, அல்லது சமுதாயமோ, விழா எடுக்கின்ற அரசியல் வாதிகளோ, கற்றறிந்த ஆசிரியர்களோ யாருமே கவனிப்பதாய் இல்லை. இவர்களின் நிலை அந்தோ பரிதாபம் இன்று இவர்கள் கவனிப்பாரற்று தலை தொங்கிய நிலையில் பாடசாலைக்குள் ஏனைய மாணவர்களின் கிண்டலுக்கு உள்ளாகி பாடசாலைக் கல்விக்கு முடிச்சுப்போடுகின்ற ஒரு நிலைமையை இப்பரீட்சையின் பெபேறுகள் தோற்றிவித்துள்ளது என்பதைத்தான் பெற்றோர்களிடமும், குறைவான புள்ளிகள் எடுத்த மாணவர்களிடமும் மனக்கவலையைத் ஏற்படுத்தி, இது பாரிய பின்விளைவுகளைத் தோற்றுவிக்கும் என்பது அறிஞர்களின் கருத்து.

உண்மையில் அரசாங்கத்தினது ஒரு ஊக்குவிப்புக்காக அதாவது குறித்த வீதமான மாணவர்களை மாவட்ட அடிப்படையில் உதவித் தொகை வழங்குவதற்கும், தேசிய மட்டத்தில் பல்வேறு சிறப்புக்களை உள்ளடக்கிய பாடசாலைகளில் கல்வி கற்பதற்குமுரிய வாய்ப்புக்களை வழங்கும் நோக்குடன் இந்த நாடுதழுவிய பரீட்சை நடாத்தப்படுகிறது. இது கடந்த பலவருடங்களாக பல்வேறு மட்டத்திலும் சில தாக்கங்களை ஏற்படுத்தி வந்தாலும், பாடசாலை மட்டத்திலும் தாய்மாரிடமும் தற்போது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள தாக்கத்தின் விளைவு பி;ள்ளைக்கு உணவு உண்பதற்கும், தூhங்குவதற்கும் நேரமற்று பலமாதங்கள் சுமைக்கு மேல் சுமையுடன், எப்படியும் பிள்ளை கூடிய புள்ளியை பெற்றால் தனக்குள்ள குடும்ப கௌரவத்திற்கு கிடைத்த பரிசு என்கிற வேதாந்தத்தை பிள்ளை மூலமாக நிறைவு செய்ய முற்படுபடுகின்ற இந்நடவடிக்கைகள் பாரிய பிழையான நடத்தைக்கு வழிவகுக்கும் என்பதை மறந்துவிடுகின்றனர்.

அண்மையில் புத்தி ஜீவிகள் பலரின் சிபார்சுகள் அடங்கிய ஆய்வு அறிக்கை கல்வியமைச்சரிடம் வழங்கப்பட்டது. தற்போது நடாத்தப்படுகின்ற தரம் 5இல் புலமைப்பரிசில் பரீட்சையில் தோற்வதற்கு அவர்களது வயது போதாது. எனவே தரம் 7இல் பரீட்சிக்கப்படுவதன் அவசியம் பற்றியும் அக்குழுவின் சிபார்சுகள் அமைந்திருந்தன. பொதுவாகவே மாணவர்களை புலமைப் பரிசில் பரீட்சைக்கு தயார் செய்கின்றபோது அவர்களிடம் இயற்கையாக பத்துவயதில் காணப்படுகின்ற பல்வேறு செயற்பாடுகளை மறக்கவைத்து வலிந்து கற்றலில் அவர்களை நெட்டுருப் பண்ணுவதனால் அப்பிஞ்சு உள்ளம் சோபிழந்து கல்வியில் அக்கரையற்று வாழ்க்கையே புஷ்வாணமாகும் சந்தர்பத்தை ஏற்படுத்தியும் சிலவேளை ஏற்படுத்தி விடுகிறது. ஆதலால்தான் வெற்றி, தோல்வி என்ற நிலைக்கும் அப்பால் மாணவரின் கல்வி மீதான பற்றுக்கு அடுத்தபடிக்கட்டாக இப்பரீட்சை அமைய வேண்டுமே ஒழிய மாணவர்களை மனவேதனைக்கு உட்படுவதை தவிர்ப்பதாக அமைய வேண்டும்.

பரீட்சை முடிவுகள் சரியாக அமையாதபோது ஏற்படுத்திவிடும் விபரீதங்கள் மனதை நெகிழவைத்தும் விடுகின்றன. அதற்குதாரணமாக அண்மையில் நடைபெற்ற சம்பவம் ஒன்று மனதை தொட்டதனால் இதனை எழுதுகின்றேன். அதாவது பரீட்சை முடிவுகள் வெளியாகியதும் தனது பி;ள்ளையின் முடிவினை கைதொலை பேசியில் ஒரு இளைஞரிடம் பார்க்கும்படி கேட்கிறார்கள். பார்த்த இளைஞன் ஒரு புள்ளி குறைவினால் சித்தியடையவில்லை என்று கூறியதுதான் தாமதம்  படிப்பு வாசனையே இல்லாத அப்பிள்ளையின் பெற்றோர் சித்தியடையவில்லை என்ற காரணத்தினால் மனமுடைந்து அவ்விடத்தில் இருந்து அழ ஆரம்பித்து நாள் முழுவதும் புலம்பியழுது மன அழுத்தத்திற்கு பிள்ளை உட்பட்ட சம்பவம் மனதை உருக்கியே விட்டது. அடுத்தநாள் மாணவனின் ஆசிரியர் அவ்விடம் சென்று ஆறுதல் கூறினாலும் மரணவீடுபோல் காட்சியளித்த பரிதாபத்தை என்னவென்று கூறுவது.

தற்போது உளரீதியான ஆலோசனை வழங்கப்பட்டு ஓரளவு மனமாற்றத்தை ஏற்படுத்தியதன் பிற்பாடு அம்மாணவன் வழமைபோன்று பாடசாலைக்கு செல்லும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்படியான சம்பவங்கள் மாணவர்களின் நடத்தைக் கோலத்தில் மாற்றத்தை ஏற்படுத்திவிடும் இப்பரீட்சையின் ஊடாக மாணவர்களினது உடல். உளரீதியான அழுத்தங்களுக்கு ஒரு வகையில் பெற்றோரும், சில கற்றோரும் காரணவாதிகளாக அமைந்துவிடுவதுதான் மிகவும் கவலைக்குறிய விடயமாகும். புதிய கல்வி சீர்த்தம் நடைமுறையில் இருந்தாலும் பயன்பாட்டில் இருக்கின்றதா?

கடந்த 1997 இல் கொண்டுவரப்பட்ட ஆரம்பக்கல்வி சீர்திருத்தத்தின் நோக்குக்கு மாற்றமாகவே இப்பரீட்சையின் முடிவுகள் உணரப்படுகின்றன என்பதைத்தான் பலரும் கூறுகின்றனர். அப்போது ஏற்பட்ட பல மாற்றங்கள் தவறுகள் காரணமாக மீண்டும் புதுப்பிக்கப்பட்டு 2003இல் தேசிய கல்வி ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் மனித விருத்தி பற்றிய தொலைநோக்கை அடைந்து கொள்வதற்காக தேர்ச்சி மைய, பாடத்திட்ட விருத்திப் பிரவேசத்தின் போது மொழிப்பாடவாரியான தேர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அத்துடன் பொதுத்தேர்ச்சிக் குறிக்கோள்களை அடைவதற்கு மாணவர்கள் எய்த வேண்டிய அடிப்படைத் தேர்ச்சிகளையும் விதந்துரைத்துள்ளது. அதாவது தொடர்பாடல் தேர்ச்சிகள், ஆளுமை விருத்தி தொடர்பான தேர்ச்சிகள், சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகளுக்கான தேர்ச்சிகள், வேலை உலகிற்கு தயார்படுத்தலுக்கான தேர்ச்சிகள், சமயமும் ஒழுகலாறும் தொடர்பான தேர்ச்சிகளும், ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தல், விளையாட்டுப் பற்றிய தேர்ச்சிகள், கற்றலுக்கான கற்றல் தொடர்பான தேர்ச்சிகள் ஆகியன விருத்தியடைந்து செல்லும் விதமாகக் கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகள் அமைதல் சிறப்பானது என்பதைத்தான் இவ்வயது மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை எதிர்பார்க்கின்றது. 

ஆனால் இது நடைபெறுகின்றதா? என்றுபார்த்தால் வித்தியாசமான ஒரு போக்கைத்தான் இந்த புலமைப் பரிசில் பரீட்சை வகுப்புகளுக்கு தயார் செய்யப்படுகின்ற மாணவர்கள் நோக்கப்படுகின்றனர். எனவேதான் இப்படியான உளரீதியான தாக்கங்களுக்கு உள்ளாக்கப்படுகின்ற பரீட்சைக்கு குறைந்த புள்ளிகள் 70க்கு மேல் எடுத்த அனைவருக்கும் கல்வியமைச்சினால் தராதரம் வழங்கப்படும் என்கிற உத்தரவாதத்தையும் மீறி குறிப்பிட்ட புள்ளிகளுக்கு மேல் எடுத்த மாணவர்களின் நலனை கவனிக்கும் அதேவேளை குறைவாக எடுத்த மாணவர்களையும் பாராட்டி கௌரவிப்பது அவர்களது எதிர்கால வளர்ச்சிக்கு உதவும் ஆற்றலை வழங்கும் என்பதைத்தான் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்லாது ஆரம்ப வகுப்புக்களில் ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் பணியை மாணவர்களுக்கு ஒழுங்கு செய்து கொள்வதுடன், இவர்கள் பிள்ளைவிருத்திப் பருவத்தின் தீர்க்கமான ஒரு கட்டத்தில் காணப்படுவதால் அவர்களிடம் ஆக்கச்சிந்தனையையும், சமூகத்திறன்களும், ஆளுமைப்பண்புகளும் விருத்தியடைந்து இசைவடையும். ஆதலால் பாடசாலைப்பருவத்தில் மாணவர்கள் கற்றலுக்காக சூழலுடன் இடைத் தொழிற்பாடுகளை நடத்துவது மிக முக்கியமாகும். அதற்காகவேண்டியே ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி ஆசிரியர்களுக் வழங்கப்படுகிறது. அதனை முற்று முழுதாக வாசித்தறிந்து அவற்றிலுள்ள விடயங்களை சூழலுடன் இயைபாக்கி கற்றலை மேற்கொள்கின்றபோது இலகுவாகவே மாணவர்கள் கற்றலின்பால் ஈடுபாடுடையவர்களாக தோற்றம் பெறுவார்கள். இம்முறை பரீட்சைக்கு உள்வாங்கப்பட்ட பல வினாக்கள் நேரடியாக பாடத்திட்டத்திற்குள் உட்பட்டவாறே மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. பாடசாலையின் ஆசிரியர் இதனை அழுத்தமாக பிரயோகிக்காமல் சாதாரணமாக கற்பிக்கின்றபோது இலகுவாக மாணவர்களினதும், பெற்றோர்களினதும் மன அழுத்தத்திற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளலாம்.

இதனை மையமாகக் கொண்டே பரீட்சை முடிவுகள் வெளியான கையுடன் தேசிய பத்திரிகை ஒன்றின் ஆசிரியர் தலையங்கத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. 'வெற்றி பெற்றவர்கள் ஆனந்தக்களிப்பு, கற்பித்த ஆசிரியர் தொடக்கம் உறவினர்கள் வீடுவரை இனிப்புப்பண்டம் வழங்குதல், சித்தியடைந்த மாணவர்களின் கட்அவுட் காட்சிப்படுத்துதல், பத்திரிகையில் மாணவர்களின் போட்டோ இவ்வாறு பெற்றோர் ஆசிரியர் படாதபாடு படுத்துகின்றனர். இன்னொருபுறம் குறைவாக புள்ளி பெற்ற மாணவர்களை கவனியாது விடுகின்றனர். அவனது மனவேதனை அவனது உளப்பாதிப்பினால் விளையப்போகும் எதிர்காலத்தாக்கங்கள் குறித்து கல்விச் சமுதாயம் கவனம் கொள்ளத் தவறிவிடுகிறது. 

அத்துடன் தன்னை முற்றாக புறந்தள்ளிவிட்டார்கள் என்கிற மனவேதனையில் அப்பிஞ்சு உள்ளத்தின் குமுறலையும் நாம் கவனிக்கவேண்டும். விளையாட்டை மறந்து சதா கற்றல் என்ற நிலையில் புள்ளிகள் குறைவான காரணத்தினால் ஆசிரியர், மாணவர்கள், பெற்றோர்கள், உற்றார் உறவினர் ஏன் அதிபர்கூட இவனை நச்சரிப்பதனால் மொத்தத்தில் குழந்தைப் பருவத்தையே மறந்து விடுகின்றான். அத்துடன் புலமைப் பரீட்சையின் பின்னர் பெற்றோர்கள் பலர் உளமருத்துவரிடம் தங்கள் பிள்ளைகளை அழைத்துச் செல்கின்ற ஒருநிலைக்கு இப்பரீட்சை அமையுமானால் எதிர்கால புத்திஜீவிகளை எங்கே தேடுவது. ஆதலால்தான் இப்பரீட்சை தேவையான ஒன்றா என்பதை சிந்தித்துப்பார்க்கின்ற கடப்பாடு அனைவருக்கும் உண்டு' என்கிற கருத்தை தெளிவுபடுத்தி விரிவாக எழுதப்பட்டிருந்தது. 

உண்மையில் ஆய்ந்து அறிந்து பார்க்கின்றபோது கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இத்தகைய புலமைப்பரிசில் பரீட்சையினால் தாக்குண்ட பிள்ளைகளைப் பற்றிய அறிக்கை ஒன்றில் இவ்வாறு காணப்படுகிறது. இப்பரீட்சை எழுதிய பிள்ளைகள் பலர் பல்வேறு நோய்களுக்குள்ளாகி வைத்திய உதவியை நாடுகின்றனர். அதிகமான மாணவர்களிடம் இந்தநோய்கள் பரீட்சைக்குத் தயாராகும் போதும், பரீட்சையின் பின்னரும் ஏற்பட்டவை என்பதையே சுட்டிக்காட்டுகின்றன. இப்பரீட்சை காரணமாக இப்பிள்ளை அனுபவித்து வரும் மன அழுத்தக்காரணிகளை மதிப்பீடு செய்தபோது தலைவலி, பார்வை மங்குதல், தலை சுற்றல், நாற்பட்ட வயி;ற்றுவலி, மூட்டு வலி, தசை வலி, மூர்ச்சையடைத்தல், வலிப்பு, மூச்சுத் திணறல், தூக்கமின்மை போன்ற மனவேதனைகளை இப்பருவத்தின் பிள்ளைகளுக்கு இப்பரீட்சை முடிவுகளும், ஆரம்பமும் ஏற்படுத்திவிடுகின்றன. என்கிற விடயத்தை ஆய்வுகள் தொட்டிக்காட்டி நிற்கின்றன.

அதேவேளை கற்ற பாடசாலைகளில் மாணவர்களிடமிருந்து பல அண்பளிப்புக்கள் பெறப்பட்டு மாணவர்களின் பெற்றோர்களால் பாராட்டுப் பெறவைக்கின்ற முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் குறைவான புள்ளிகள் பெற்ற மாணவர்களையும் இணைத்து பாடசாலைகள் போட்டி குரோத மனப்பாண்மையை விடுத்து பாடசாலைக்கு பெயரைப் பெற்றுத்தந்த மாணவர்களை பாடசாலை சமுதாயமே பாராட்டவேண்டும். அதை விடுத்து பலமாதங்களாக டியூஷன் என்றும், புத்தங்கள், சஞ்சிகைகள், கருத்தரங்குகள் என்கிற பல்வேறு கோணத்தில் பணத்தை பிடிங்கிய நிலையில் மீண்டும் பல ஆயிரங்கள் மாணவர்களின் பெற்றோர்கள் மூலமாக கறக்கப்பட்டு விழா எடுப்பது சிலருக்கு சந்தோசமாக இருப்பினும் குறிப்பாக அரசாங்க உத்தியோகத்தர்களது பிள்ளைகளுக்கு எந்தவிதமான கொடுப்பனவுகளும் இன்மையானது அவர்களது உரிமை சாதாரணமான சம்பளத்திற்காக மறுக்கப்படுவது கவலைக்குறிய விடயமாகும்.

எனவே, பரீட்சைக்குப்பிந்திய காலகட்டத்தில் மாணவர்களினது மன அழுத்தங்கள் அவனது கல்விக்கு வேட்டுவைக்கின்ற நிலையிலிருந்து பிள்ளை விரும்பும் இடமாக பாடசாலையும், உன்னதமான கல்வியும் எதிர்கால நல்வாழ்வுக்கு அடித்தளமாக இப்பரீட்சையும் அமைய வேண்டும் என்பதை அனைவரும் ஏற்றுக் கௌ;ளும் நிலை எப்போது உருவாகின்றதோ அப்போதுதான் இப்புலமைப் பரிசில் பரீட்சைக்கு உண்மையான பெறுமதி உண்டு என்பதை கற்றறிந்தோரும், பெற்றோரும் உணர்தல் வேண்டும். அத்துடன் இப்பரீட்சையின் ஆரம்பம் உயர்வகுப்பில் சித்தியடைவதற்கு எவ்விதமான தடையாகவும் இருக்கக்கூடாது என்பதைகூறி கற்பதற்கான தடைகள் அகற்றப்பட்டு சாதனை புரியும் ஆற்றலை வழங்கவேண்டிய கடப்பாடு பாடசாலைக்கு உண்டு என்பதை சமுதாயத்தின் முன் உணர்த்துதல் அவசியமாகும்.

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.